Back
Home Events மாபெரும் தமிழ்க்கனவு – 2025
மாபெரும் தமிழ்க்கனவு

மாபெரும் தமிழ்க்கனவு – 2025

தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையும் தமிழ் இணையக் கல்விக் கழகமும் இணைந்து 2025-26 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் “மாபெரும் தமிழ்க்கனவு” என்னும் பெயரில் 200 பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டது. 200 நிகழ்ச்சிகள் இரண்டு லட்சம் மாணவர்கள் எனும் மாபெரும் இலக்கை மையமாகக் கொண்டது இந்நிகழ்வு.

இவ்வகையில், தூத்துக்குடி மாவட்டத்தின் முதல் நிகழ்ச்சி 14.08.2025, வியாழக்கிழமை அன்று காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெறும் கல்லூரியில் இருந்து 500 மாணவர்களும் அருகில் உள்ள கல்லூரிகளில் இருந்து 500 மாணவர்களுமாக மொத்தம் ஆயிரம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர், கல்லூரிக் கல்வி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், காமராஜ் கல்லூரியின் முதல்வருமான முனைவர் பானுமதி, மாநில ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்தனமாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.

முனைவர் செ.சைலேந்திரபாபு, முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்கள் “ஊழையும் உப்பக்கம் காண்போம்” என்னும் தலைப்பில் சிறப்பானதொரு சொற்பொழிவாற்றினார்.சிறப்பு விருந்தினர் அவர்களை காமராஜ் கல்லூரி உதவிப்பேராசிரியர் மா.அய்யனுராஜ் வரவேற்று பேசினார். முயற்சியின் பயிற்சியும், ஊழையும் தோற்கடித்து வெற்றி பெறவும், மாணவர்களின் நடைமுறையும் ,உயர்வுக்கு உண்மைவழியும் , ஆகியன அவரது கருத்துரையின் முக்கிய எடுகோள்களாக இருந்தன. ஒட்டுமொத்த மாணவர்களின் கவனமும் பேச்சாளரின் உரையில் குவிந்திருந்ததைக் கண்டு கொள்ள முடிந்தது. நிறைவானதொரு உரையாக இருந்தது.நிகழ்வை மூன்றாமாண்டு இயற்பியல் மாணவி யாஷிகா தொகுத்து வழங்கினார். மாணவர்களின் பங்கேற்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியதாக இருந்தது.

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் வினவிய வினாக்களின் அடிப்படையில் சிறந்த ஐந்து வினாக்களைக் கேட்ட மாணவர்களுக்குக் கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி எனும் பட்டம் வழங்கிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்ப்பெருமிதம் என்னும் நூலினைச் சார்ந்து சிறப்பாக உரையாற்றிய மாணவர்களுக்குப் பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி எனும் பட்டம் வழங்கிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெருமதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர் அவர்கள், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வைப் பார்வையிட்டு மாணவர்களுக்குப் பரிசளித்துச் சிறப்பு செய்தது நிகழ்விற்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சமூக நலத்துறை சார்பில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், வேலைவாய்ப்பு, உயர்கல்வி ஊக்கத்தொகை, வங்கிக் கல்விக்கடன் பெறும் முறை, பயனுள்ள நூல்கள் தொடர்பான காட்சி அரங்குகள் மாணவர்கள் கண்டு பயன்பெறும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் நோக்க உரையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். நன்றியுரையை காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் பானுமதி அவர்கள் வழங்கினார்கள்.

நாட்டுப் பண்ணோடு தூத்துக்குடி மாவட்டத்தின் 2025 ஆம் ஆண்டின் முதல் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நிறைவுற்றது. விழாவினை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் மா.அய்யனுராஜ், பா.ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

Date
Aug 14 2025
Expired!
Time
10:00 am - 2:00 pm
Location
Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply